என் கருப்பி புள்ள
சில நினைவுகள் நம்மை விட்டு விலகுவதில்லை விலகி செல்ல நினைத்தாலும் அவை நம்மை துரத்தி கொண்டே இருக்கும்... எதை நோக்கி பயணித்தாலும் பள்ளிக்கூட நினைவுகள் வந்தவுடன் குழந்தையாக மாறிவிடுகிறோம்... வளரும் பருவம் சிறகடித்து பறக்க நினைக்கும் வயது பட்டாம்பூச்சியை விரட்டி பிடிக்கும் காலம் அது...
கண்ணாடி போல் கிணறுகளில் நிரம்பி கிடக்கும் தண்ணீரை கண்டால் கிணற்று தவளைகளாய் துள்ளி குதித்து விளையாட தோன்றும். இந்த பசுமை நிறைந்த நினைவுகளில் நடந்த நிகழ்வு ஒன்று திடீரென உதித்தது.
2001 காலகட்டம் நான் 5ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். சிட்டாய் சிறக்கடிக்க ஆசைப்பட்ட காலமும் அதான். ஒரு வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணி இருக்கும் பள்ளிக்கூடம் முடியும் நேரம். அந்த மணி ஓசை டிங் டிங் டிங் என்று எங்கள் காதில் ஒலிக்கிறது.... நரம்பு பைகளை கைகளில் பிடித்துக்கொண்டு மணியோசை கேட்டதும் சும்மா சிட்டா வீட்டுக்கு ஓட்டம் பிடிக்கிறோம். அந்த ஐந்து நாள் பள்ளிக்கு வருகின்ற மகிழ்ச்சியை விட வெள்ளிக்கிழமை சாயங்காலம் 3.59 மணிக்கு அந்த ஒரு நிமிட மகிழ்ச்சி எங்கே தேடினாலும் கிடைக்காது. அப்படி ஒரு மகிழ்ச்சி.. அப்பாடா ஸ்கூல் விட்டாய்ங்க சனி, ஞாயிறை கொண்டாடி தீர்த்திட நானும் எனது அண்ணனும் முடிவு பண்ணிட்டோம்... வீட்டுக்கு வர 100 அடி தூரம் இருக்கும் அப்ப என் அண்ணன் நாளைக்கு நம்ம மணியார் வீட்டு கிணத்துல ஒரே கும்மாளம்தான்...
காலையில கிரிக்கெட் விளையாடுறோம் மதியம் கிணத்துல அடி மண்ணை தொட்டு பாக்கணும்டா. ஏதோ நிலாவுல கால்பதிக்கிற மாதிரி பேசுனான்... கிணத்துக்கடியில அடி மண்ணை எடுக்குற போட்டி வைத்தால் எங்க அண்ணன் தான் கோல்டு மெடல் வாங்குவான்... அவனுக்கு கிணத்தை கல்யாணம் பண்ணிக்குடுத்தா காவல் காத்துக்கிட்டு கிடப்பான் அப்படி ஒரு பிரியம்..
அப்படியே பேச்சு கொடுத்து வீட்டுக்கு வரும் நொடி பொழுதில் என்னுடன் படிக்கும் தோழி பேரு அழகி.. செல்லமா அழகி புள்ளன்னுதான் கூப்பிடுவேன். அவளும் 4 காளை மாட்டை ஓட்டிக்கிட்டு வந்தா, என்னை பார்த்து டேய் கருவா... நில்லுடா உன்ட பேசனும் என்றாள். அவ பேசுவதை கேட்டு நின்றேன். அவள் எனது தலை முடியை பார்த்து "டேய் உன் தலை முடி நல்லா இருக்குடா முடியை வெட்டாத அப்படியே கரு கருன்னு பாக்க அழகா இருக்கு" என்றதும் வெட்கமாய் ஒரு பார்வை அவளை பார்த்தபடியே ஸ்டைலா தலை முடியை கோதியபடி .... சிரித்த முகத்துடன் அமைதியாக உனக்கும்தான் உன்னோட ரெட்டை ஜடை நல்லா இருக்குத்தா என்றேன் .... உடனே அழகி புள்ள டேய் "பொய் சொல்லாத நான் சொல்லவும் நீ சொல்றியா" என்றாள். த்தோய் பொய் சொல்லல நா சொல்ல வந்தேன் அதுக்குள்ள நீ சொல்லிட்ட என்று பேசி சமாளித்தேன்.. அவளும் அசட்டு சிரிப்புடன் எனது அண்ணனிடம் நீ ஏண்டா பேசாம வர என கேட்டதும் என்ன பேசுறது தெரியலை அதான் நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு வரீங்க என்றான்.
பள்ளிக்கூடம் விட்டா போதும் அழகி புள்ள இல்லாமல் அந்த நாள் விடியாது ... காலை 8 மணிக்கு அழுக்கு நிறைந்த முகத்துடன் மாட்டை விரட்டி கொண்டு வயலுக்கு செல்வாள் நானும் அவளுடன் செல்வேன். பேருக்கேத்த அழகிதான் அதுவும் அழகான கருப்பி புள்ள.. சிவப்பா இருந்தா கூட அவ்வளவு அழகா இருப்பாளான்னு தெரியாது. அவள் பேசும்போது மெய்மறந்து அவள்பேசுறத மட்டும் கேட்க தோனும்.... ஒரு நாள் இரவு அழகி புள்ளைக்கு ரொம்ப முடியலை அம்மா போட்டுருக்கு, படுத்த படுக்கையா கிடக்கா அவங்க அம்மா அப்பா அழுது பொலம்பிட்டு இருந்தாங்க. நானும் அவளை பார்க்க போனேன்; வீடு என்று அளவிட முடியாத அளவிற்கு தீப்பெட்டி அளவில் ஒரு குடிசை வீடு, தரையில் படுத்து கிடந்தவ என்னை பார்த்ததும் டேய் கருவா... "நாளைக்கு நாம நத்தை பிடிக்க போலாம்டா, மறக்காம என்னையும் கூட்டிட்டு போ" என்றாள். அவளிடம் நான் பொய் சொல்ல விரும்பவில்லை, நீதான் வீட்டுக்குள்ள கிடக்க உன்னை விடுவாங்களா அவுக என சண்டையிட்டேன். டேய் டேய் நானும் வரேண்டா எனக்கு இங்க இருக்க பிடிக்கலை என்றாள். அவளிடம் கொஞ்சம் நேரம் இருந்து பேசிவிட்டு வீட்டிற்கு சென்றேன். திடீரென மயங்கிவிட்டதாக கூறி பொன்னமராவதி மருத்துவமனைக்கு கொண்டு போனாங்க. அடுத்த நாள் காலை ஊரே மயான அமைதியில் இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் அம்மாச்சியிடம் கேட்டேன் ஏன் என்ன ஆச்சு, அழுதுக்கிட்டு இருக்க என கேட்டேன்.
என் அம்மாச்சி மூக்குல இருக்க சளியை சிந்துவிட்டு, கருப்பன் மகள் அழகி செத்து போச்சுடா என்றதும் நான் ரொம்ப வெகுளித்தனமாக செத்தா என்ன நாளைக்கு தான் என் கூட விளையாட வள்ளியம்மை கண்மாய்க்கு வருவா, அங்கே அவளை பாத்துக்குறேன் என்றேன். என் அம்மாச்சி என்னை திட்டிக்கிட்டே "அட கூறு கெட்ட பயல செத்தவ எப்படிடா உயிரோட வருவா, இனிமே அந்த கடவுள நினைச்சாலும் வரமாட்டா, போன உசுரு போனது தான் நீ அவளை தேடி அங்கே இங்கேனு அலைஞ்சு காத்து பிசாச நம்ம வீீட்டுக்கு கொண்டு வந்துராத" என்று அழுதுக்கொண்டே பேசினாள். எனக்கு ஒன்னுமே புரியலை அவ செத்து போனதா தெரியலை ஏதோ அவ முகத்தை பாத்துட்டே இருக்கலாம் தோனுச்சு, அந்த நொடி இதயம் படபடவென்று வேகமாய் துடித்தது. அவ வீட்டுக்கு போனா, அழகி அங்கு இல்லை வீடு முழுக்க சொந்தகாரங்க அழுகுற சத்தம் மட்டும் கேட்டது. கடைசியாக பார்க்க முடியாத ஏக்கம் தவிப்பாய் மாறியது. அழகி எங்கே புள்ள இருக்க நான் கேட்ட குரல் அவள் காதில் ஒலித்திருக்கும் என்ற நட்பாசை. அப்போது என் எதிரே இரண்டு பெரியவர்கள் பேசிக்கொண்டு சென்றனர். சின்னப்பிள்ளை சாவுயா ஊர் பழி கேட்கும் சாவக்குஞ்சை பழி விடுங்கனு சொன்னாங்க. பாவம் புள்ளை விரைச்சு போச்சுப்பா, ச்சே சின்ன வயசுல செத்து போயிட்டாலேன்னு ஆளுக்காளு பேச ஆரம்பிக்கும்போது தான் இறப்பு என்பது சோகத்தை தரக்கூடிய செய்தினு புரிஞ்சிக்கிட்டேன். ஓ.... அழ தெரியலை அவ ஏன் செத்து போனா கோபம் தான் வந்தது. "அழகி புள்ள கிறுக்கு மட்ட ஏண்டி நாளைக்கு விளையாட வரமாட்டியா நீ போடி இனிமே நா உன் கூட பேச மாட்டேன்" எனக்குள்ளே புலம்பிக்கிட்டு இருக்கேன். இப்போதும் அழகி என்றாலே எனக்குள் ஒரு நடுக்கம் வந்து விடும். நமக்கு ரொம்ப பிடித்தவர்கள் விலகி சென்றாலே தாங்க முடியாத சோகம் தொத்திக்கொள்ளும். ஆனால், அழகி இறந்தது என் நெஞ்சை வாட்டும் வடு என்று கூட சொல்லலாம். பாராமுகம் காணாமலே சென்றுவிட்டாள். இறப்பு என்பதை தெரிந்துகொள்ளத்தான் அவ போனாளோ என்று கூட இப்போது யோசித்திருக்கிறேன்.
அறியாத வயசு
பருத்தி வீரன் படத்தில் இடம்பெற்ற அறியாத வயசு பாட்டு வரும்போதெல்லாம் அழகி புள்ள நினைப்புதான் வரும், அவளுடன் பேசி சிரித்து விளையாண்டு, வெட்டுக்கிளியாய் அவள் கை கோர்த்து திரிந்த காலங்கள் மிகவும் அழகானது. காதலில் முத்தத்தை விட, பேசுவதை விட பக்கத்தில் இருப்பது அழகு, தொடுதல் என்பது மன நிறைவை தரும் என எழுத்தாளர் எஸ்.ரா குறிப்பிட்டிருப்பார். எந்த பெண்ணிடத்திலும் அவளுடைய கண்களை தேடுவதில்லை, யாரிடத்திலும் அவள் அப்படி இருப்பாள் என்று உறவாடியதில்லை. அவள் ஒரு குட்டி தேவதை. அந்த பருவத்தில் கிடைத்த அளவிட முடியாத பேரன்பு. டவுசர் சட்டை போட தெரியாத வயசுல அறியாத பருவத்தில் வந்த காதல்.... அந்த அழகி இப்பவும் என்னுடைய பேரழகிதான் என் கருப்பி புள்ளதான் அன்பான கருப்பி அழகி அவள்...
ஆனாலும் என் அழகி கருப்பி வேப்ப மரத்து நிழலிலும், வள்ளியம்மை கண்மாய் நிலத்திலும், சின்னபரப்பான் குளத்திலும்.. அந்த வறண்ட பூமியிலும் எனது நினைவிலும் எப்பொழுதும் வாழ்கிறாள் அது போதும் எனக்கு.....
பாண்டித்துரை
Comments
Post a Comment