சொல்ல மறந்த கதை

ரொம்ப நாள் கழித்து மீண்டும் எழுத தொடங்கியிருக்கிறேன்.  என் மனதை போட்டு அழுத்தி கொண்டிருந்த கதை, எப்படி தொடங்குவது, எதை சொல்லி புரிய வைப்பது... புள்ளி வைத்து விட்டால் கோலம் போட்டுவிடலாம். அது எட்டு புள்ளி கோலமா, பதினாறு கோலமா என்பதை தீர்மானிப்பது நாம் தான். கேணி வெட்ட தொடங்கி விட்டால் ஆழத்தை பற்றி யோசிக்கக் கூடாது.   மனதில் உள்ள விசயங்களை பளிச் என்று அப்படியே சொல்ல நினைக்கிறேன். இருந்தாலும் எனக்குள்ளே ஒரு பைத்தியக்காரன் ஒழிந்திருக்கிறான். அவன் என்ன சொல்ல நினைக்கிறானோ... அதையை பதிவு செய்கிறேன். நீங்களும் படித்து விட்டு கரைந்து செல்லுங்கள். பாரங்களை ஏற்றி கொள்ள வேண்டாம்.  இந்த நாள் என்று சொல்வதை விட வலிகளை தாங்கி கொண்டு சிரித்த முகத்துடன், சிலுவையை சுமக்கும் ஏசுவை போல மறக்கவும் நினைக்கின்ற சுகமான சுமைகளை சுமந்து கொண்டிருக்கிறேன். 


2010 இருக்கும் புதுக்கோட்டை மாமன்னர் கலை & அறிவியல் கல்லூரியில் பி.ஏ. வரலாறு படிப்பை தொடர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. பி.ஏ. வரலாறு இரண்டாம் வருட தொடக்கம் ஜூன் மாதம் இருக்கும், நினைக்கிறேன், சரியா ஞாபகம் இல்லை. ஆனால் அந்த நாள் வராமல் இருந்திருக்கலாம்; என்றுதான் எப்போதும் என் மனதை  வருத்தி கொண்டிருக்கிறது. காலேஜ் 2nd Year-ல தான் என் கைக்கு முதல் முறையா நோக்கியா போன் கிடைக்கிறது. அம்மாவோட சிபாரிசுல அப்பா எனக்காக வெளியூர்ல இருந்து அனுப்பி வைச்சாரு.  முதல் முறையா NOKIA குடும்பத்தில் நானும் இணைகிறேன். அந்த பிரமிப்பு இன்றும் குறையவில்லை. ஏக்கம் நிறைந்த மனம் என் கைகளில் அடங்கிய அந்த  1280 நோக்கியா மாடல் போன் எனக்கு ஏத்த செப்புக்குடம் தான். அடிச்சாலும், மிதிச்சாலும் அவனை போல எவனும் வரமாட்டான். "அடிச்சாலும் சத்தமே வராது, ஓடுனது கிடையாது" எனது அனைத்து கொடுமைகளையும் தாங்கி கொண்டவன் அவன் மட்டும் தான்.  அதுவும் அந்த போன்ல பாம்பு கேம் படுற பாடு இருக்கே, அய்யோ பாவம்... நோ கேப்சன்...  முதல் முறையா ஏர்டெல் நெட்வொர்க்கை தொடங்குகிறேன். அந்த நம்பர் கூட இன்னும் என் மைண்டல இருக்கு, 9159214342. இப்போ அந்த நம்பர் என்னிடம் இல்லை தலையை சுத்தி தூர வீசிவிட்டேன். ஆனால், அதனால் ஏற்பட்ட வலி, அதன் நினைவுகள் மிகவும் அழகுதான். ஒரு மாசத்துக்குள்ளே 3000 Message காலி பண்ணனும்னா சும்மா இருப்பீங்களா...  வந்தவன் போனவன், மாமன், மச்சான், நண்பன் லொட்டு, லொசுக்கு யாருன்னே தெரியாத நபருக்கெல்லாம், பார்வேர்ட்  Message தட்டிவிட்டு அப்பாடா... இன்றைய கடமை முடிந்துவிட்டது. 



அதுவும் நமக்கு பிடித்தமான நண்பர்களுக்கு மட்டும் அனுப்பக் கூடிய டபுள் மீனிங்  Message ரசிக்கும் படியும், கொஞ்சம் காரசாரமா... "காரசாரம்" கோடுவேர்ட் புரிஞ்சுக்கோங்க நண்பர்களே அப்படி எங்க ஊர் பத்தாம் நம்பர் பஸ்ஸை பிடிக்கிறதுக்காக காலேஜ் முடிச்சுட்டு புதுக்கோட்டையில் இருந்து 16ம் நம்பர் பஸ்ல ஏறி மலையடி வந்து இறங்கும் முன் அவசரம் அவசரமா... அந்த காரசாரமான Message-ஐ பார்வேர்ட் பண்ணிட்டேன். அந்த குறுஞ்செய்தி என் வாழ்வை தலைகீழாக புரட்டி போடும்னு நினைச்சு கூட பார்க்கலை. வடிவேல் கதை மாதிரிதான் "நான் பாட்டுக்க சிவனேனு தானடா இருந்தேன்,  என் கைல போன குடுத்து இப்படி சிக்க வைச்சுட்டீங்களே" என்றுதான் தோன்றியது. அந்த மாதிரி அந்தரங்கமான டபுள் மீனிங் குறுஞ்செய்தி ஒரு நம்பர் மாறியதால் என்னை போன்ற 19 வயது உள்ள பெண்ணுக்கு சென்றுவிட்டது. அடுத்த நொடியே புது நம்பர்ல இருந்து போன் கால் வருது... நமக்கு எப்போதும் புது நம்பர்னா பயம் தான்... இப்ப இல்ல.. நான் சொல்றது ஒரு 10 வருடத்திற்கு முன்னாடி...  

யாரா இருக்கும்  என்ற நினைப்பில், "ஹலோ".. என்று பயந்த சுபாவத்தில் பேசினேன்... அவளும் "ஹலோ யாரு நீங்க, இந்த  Message பண்ணது, நீங்கதான" என்று கேட்க நானும் நான் "இல்லைங்க சாரி தெரியாம தவறா வந்திடுச்சுன்னு" சொல்ல சும்மா சுர்ருன்னு மண்டைக்கு ஏத்துற மாதிரி "உங்க அக்காவுக்கு, உன் அம்மாவுக்கு இந்த Message பார்வேர்ட் பண்ணுடா பொறுக்கி நாயே... இருடா போலீசுக்கு போன் பன்றேன்... முகம் பேர் தெரியாத நபருக்கு இப்படிதான் அனுப்பியாவாடா நாயே".. அந்த புள்ள... ஆத்தாடி பொளந்து கட்டுது, நம்மள எங்க பேசவிட்டா, அப்புறம் போனை கட் பண்ணேன். அடுத்தடுத்து கால் வந்துக்கிட்டே இருக்கு.. நானும் சாரினு  Message பன்றேன் எங்க அந்த புள்ள கேட்டுச்சு வாய்க்கு வந்தபடி அசிங்கமா திட்டலை மத்தபடி எல்லா வார்த்தையும் திட்டிட்டாங்க... அப்ப உடம்புல ஒரு பதட்டம்.. ஆட்டம் வந்தது இப்பகூட என்னால மறக்க முடியல.. 


அன்றைய இரவு தூக்கம் இல்லாமல், ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி ஒரு பக்கம் வாட்டி எடுத்தது. இன்னொரு பக்கம் அசிங்கப்பட்டோமே சே.. ஒரு பொட்டச்சி இந்த வாங்கு வாங்கிட்டாளே என்ற மாட்டுக்கு கொம்பு சீவி விட்டது போல ஒரு கோபம்.. மீண்டும் அந்த குறுஞ்செய்தியை வாசித்து பார்க்கும்போது எனக்கே அறுவறுப்பாதான் இருக்கு.. இவ்வளவு கேவலமான செய்தியை ஒரு பொண்ணுக்கு அனுப்பிட்டோமே என்று தோன்றியது. அந்த இரவு என் தூக்கத்தை மட்டும் அல்ல, எனது தொலைபேசியில் இருந்த அசிங்கமான, மிகவும் அந்தரங்கங்களை பேசும் குறுஞ்செய்தியை டெலிட் செய்ய தூண்டுதலாக இருந்தது. அடுத்த நாள் காலை அந்த பெண்ணிடம் இருந்து ஏதாவது கால் வருமா... இல்லை போலீசுக்கிட்டே சொல்லிட்டாளா... என்ற பயம் பீதியை கிளப்பியது... இதை வெளியே சொன்னா காரி துப்பிடுவானுங்க.. பசங்க கிட்ட சொன்னா, கலாய்ச்சே சாவடிச்சுடுவானுங்க... அதனால இதை யார்கிட்டயும் சொல்லாம ரகசியமா எனக்குள்ளே வைத்து கொண்டேன். அன்னைக்கு காலேஜ் போகவும் ஒரு மாதிரியா ஷையா பீல் ஆச்சு... 

வீட்ல இருந்தா ஏண்டா காலேஜ் போகலையா கேட்கும் அம்மா.... காலேஜ் போனா நீயெல்லாம் ஏண்டா காலேஜ் வந்து எங்க உயிரை வாங்குறீங்க சொல்ற வாத்தியார்... நாலாம் ரொம்ப பாவம் சார் சொன்னா நம்பவா போகுது இந்த உலகம்.. அது போன போக்கில் நாமும் போவோம் என்று காலையில வழக்கமா போற பஸ்ல போறேன். திடீர்னு பேண்ட் பாக்கெட்டில் வைப்ரேசன், ர்ர்ரு... ட்ர்ரு... சவுண்ட் வர போனை எடுத்து பார்த்தா புது நம்பரு... ஏற்கனவே அந்த பொண்ணு திட்டியது மண்டைக்குள்ளே ஓடிக்கிட்டு இருக்கு, இப்போ புது நம்பர்ல இருந்து போன் வேற...  ரொம்ப சோகமா, குரலை தாழ்த்தி ஹலோ என்றேன்.. எதிர்பக்கம் பெரியம்மா... "நான்தான்டா செல்வமணி பேசுறேன், கிழவி உன்னை பாக்கணுமா, குறும்பூர் போயி பாத்துக்க, அப்படியே காட்டுல எழனி கிடந்தா பறிச்சு சாப்பிடு... அங்கே கிரிக்கெட் ஊர் பயலுவலோட சுத்தாத மாடு" என்றதும் நான் இருக்க நிலமை தெரியாம இதுவேற காமெடி பண்ணிக்கிட்டு என்று தான் தோன்றியது. நானும் பெரியம்மாவுக்கு பதில் சொல்லிட்டு போனை கட் பண்ணேன். 

அன்று காலேஜ் போகவும் பிடிக்கலை, நேரா மச்சான் நடராஜை பார்த்துட்டு ஹாஸ்டலுக்கு போயிட்டேன். என்னமோ மாதிரி இருந்தது. பெரிய பெரிய தப்பு பண்ணவன்லாம் ஜாலியா இருக்கான், இங்கிட்டு ஒரு பொண்ணுகிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போது இன்னொரு பொண்ணுக்கு நூல் விடுறானுங்க.. நமக்கு சுட்டுபோட்டாலும் அது வராது.. பாடி வீக்.. வாய்ஸ் வீக்.. என்னத்த சொல்றது ம்ம்ம்... ரூம்ல விட்டத்தை பார்த்து பேன் சுத்துவதை கண்டு அப்படியே உறங்கி போனேன்.. அடுத்த 2 நாளும் அப்படியேதான் பயம் கொஞ்சம் தனிந்தது. பதட்டமும் குறைந்தது. அம்மாச்சியை பாக்க குறும்பூர் போனேன். கிழவி நம்மலை பாத்ததும் பலம் வந்த மாதிரி எந்திரிச்சு, "என்ன ராசா வோனும்... அய்யாவை கறி எடுத்துட்டு வர சொல்லட்டா... பழைய சோறுதான் நைட் ஆக்குனது கிடக்கு சாப்பிடுறியா".. நானும் எதுவும் சொல்லாம, ஆள் அடையாளமே தெரியாம முகமெல்லாம் ஓஞ்சு வறண்டு போயி கோடு போட்ட கைகள், பார்க்க சகிக்கலை, வயசானவங்கள பார்த்தா அப்படிதான் இருக்கும்.  சின்ன வயசுல இருந்து கிழவி கூடவே இருந்திருக்கேன்.  இப்போ என்னையை புதுசா பார்க்குற மாதிரி பேசுதே நினைச்சு அழ தெரியலை. சாப்பிடுறேன் சொன்னேன். காலேஜ் போகாம ஒரு வாரம் அங்கேயே டேரா போட்டாச்சு கிழவிக்கும், கிழவனுக்கும் ஒத்தாசையா இருந்தேன். போன்ல  Message பார்க்கும்போதெல்லாம் அந்த பொண்ணு ஞாபகம் தான் வந்து சென்றன. 

எனக்கு அந்த பொண்ணோட நம்பரை சேவ் செய்ய மனசு வரலை, உண்மையாவே தப்பு பண்ணிட்டோம் Guilty Feel முதல் முறையாக உணர்ந்தேன். ஆண் என்ற முகத்திரையை கிழித்தவளை மறக்க முடியாது. அதுவும் அவள் பேசிய விதம் கேட்ட விதம் கோபத்தை தந்தாலும் அவள் கேட்டதில் தப்பு இல்லை என்பதை உணர்ந்தேன். Thanks Dear Love... நானும் மறந்துட்டு சகஜமா இருந்தேன்... திடீர்னு ஒரு நாள் அவளிடம் இருந்து குட் மார்னிங் பார்வேர்ட்  Message, நம்மள தான் அந்த புள்ள திட்டிட்டா.. அப்புறம் எதுக்கு Message பன்றா விடக்கூடாது அவள என்று மனசுக்குள்ளே பேசிக்கொண்டு "யாரு நீங்க நான் கேட்டேன்". என் பெயர் கவின்னு சொன்னா விழுந்துட்டேன் மொத்தமா விழுந்துட்டேன்... அது எப்படின்னு சொல்ல தெரியலை... முடிவில்லா பாதையில் அவள் பெயர் மட்டும் என்னோடு பயணித்து கொண்டே இருக்கிறது.


தொடரும்

Comments

Post a Comment