ஆதலால் காதல் செய்வீர்...




இலக்கணத்தை மீறிய காதல்கள் கவனிக்கப்படுவதும் இல்லை.  காதல் என்பது இளசுகளுக்குள் உதித்து, இளசுகளோடு முடிந்து விடுவதா? காதல் என்பது வயதுகளை மீறிய வசீகரம். வருடங்களுக்குள் அடங்கி விடாத வசந்தம். இளமை காதல் கடலின் அலைகளோடு தொடங்கி அமைதியடைகிறது. முதுமை காதல் மானுடத்தின் மகத்துவமாய் ஒளிர்கிறது. மனதின் வலிமையை கொண்டு உடலின் இயலாமையை நிரப்பி செல்கிறது  முதுமை காதல். இளமையை நேசிக்க தெரிந்தவர்கள் முதுமை காட்டும் அன்பை அகப்படாத விழித்திரையில் பார்க்க முயற்சிப்பதில்லை.

காதல் பெரும் நம்பிக்கை கொண்டது.    அன்பை தொலைத்த இடத்தில் நம்பிக்கை பெறுவது இரவில் சூரியனை தேடுவது போல். இல்லாத காதலை இருப்பது போல் நம்புவதும் பெரும் முட்டாள்தனம். உணர்வுகளுக்கு மதிப்பில்லாத பேச்சிலும், புரிதல் இல்லாத இடத்திலும் நம்பிக்கையை மட்டும் அல்ல; காதலை தேடுவதும் தற்கொலைக்கு சமம். உணர்ச்சிகளை கொன்ற பிறகு, கேட்கும் பாவமன்னிப்பு இறந்த உடலை தோண்டி எடுத்து என்ன பலன்.  சிலர் காதல் சொன்ன வார்த்தைகளும், எழுதிய கடிதங்களுமே, காவியாமாய் கரைந்து போகும். சிலர் காதல் நினைவுகளோடு கவிதை பாடும். 

"பார்த்த விழிகள் உனது, எழுதாத என் பேனா உனக்காக கொஞ்சம் தலையசைக்கிறது."

சிலர் காதல் கலங்கரை விளக்கம்... சிலர் காதல் நம்பிக்கையின் வெளிச்சம்... சிலர் காதல் இரவின் பயணங்கள், நினைவுத்தூண்... சிலர் காதல் வலியின் ரணங்களை சுமந்து செல்லும். 


ஆனால், இதில் எதிலும் அகப்படாத, உலகிற்கு அறியப்படாத,  ஒரு அன்பின் நம்பிக்கையை என் வாழ்வின் பயணங்களாய் கடந்து வருகிறேன். இந்த அன்பிற்கு இணையான காப்பியங்களை தேடி வருகிறேன் எங்கும் கிடைக்கவில்லை. நம்மை நேசிப்பவர்களை நாம் நேசிப்பது இயற்கை,  எதார்த்தம், காதலின் தொடக்கம். இதிலும் முழுமை பெறாமல் தேடல் கொண்ட மனம் கவிதை சுருக்கம் போல் ஒரு அழகியலை, கண்டு வியப்படைகிறேன். எப்படி இவரால் மட்டும் அவளுக்கு பெரும் நம்பிக்கையை கொடுக்க முடிகிறது. ஏன் இந்த மனுஷன் ஓய்வு எடுப்பதில்லை. அவளுக்காக ஓடுவதை நிறுத்தவில்லை. தன் உடல் வறுத்தி இறந்து போனாலும் ஓயாது அவரது ஆன்மா. அவளை பற்றிய சிந்தனையில் ஊறி போன ரத்தநாளங்கள் அவன்.  அவள் இறந்தால் மன்னிக்க மாட்டான் அவன் வேண்டும் கடவுளை. அவள் கைகளை தடவி, முத்தங்கள் கொடுத்து, கன்னங்களை தழுவி கவித்துமாய்  அவளை கொஞ்சி பேசி, சிறுக சிறுக சேமித்த அன்பின் கொடையை இழந்து பல வருடங்கள் ஆகி விட்டன. தன் இளமைக்கான அத்தனை அழகையும், ஆசை முத்தங்களும் கடிதங்கள் வழியே நிரம்பி வழிகின்றன. சிங்கப்பூர் டூ புதுக்கோட்டை வரை வந்து சேர்ந்த கடிதங்கள் அத்தனையும் காதலின் நினைவுச்சின்னம்.  இப்போது அவன் வந்தும் இவள் மீளவில்லை, நோயால் படுக்கையில் சாய்ந்தாள். இன்று வரை மீளாத சோகம் தான். காணாத வைத்தியம், தேடி செல்லாத இடம் இல்லை. பணம் இருந்தும் நோய் குறையவில்லை. இரவின் மடியில்  படுத்தால் உறக்கம் இல்லை, உடலை வாட்டும் நோய் உயிரை பறிக்க காத்திருக்கிறது. இன்று எழுவாள்,  நேற்று வந்த துன்பம்  நாளை குறையும். மறுநாள் பேசுவாள்.  ஒவ்வொரு நாளும் அவளது நோயோடு இவன் போராடுகிறான். வீட்டுக்குள் முடங்கிய பறவை ஆனாள் பழனியம்மாள். பெற்ற பிள்ளைகள் இரண்டும் தருதலைகள் மண்ணுக்கும், பூமிக்கும், வாழும் வாழ்விலும் நாசமத்து போய்விட்டன. வாழ வேண்டிய பிஞ்சுகளின் மனங்களை கொத்தி திங்கும் கழுகாய் மாறிவிட்டன இந்த தருதலைகள். இதில் தலைச்சன் பிள்ளை ஏன் பிறந்தது என்று தெரியாது.


பழனியம்மாள் படும் துயரங்களை  துடைக்கும் அவளது காதலின் ஒளி தீத்தையா.  அவளது நண்பன், காதலன், கண்ணீர் அனைத்தும் அவனே. அவள் இரவுகளின் தீர்ப்பில் இவனது முடிவுகளை எழுதி வைக்கிறேன் நான். அவன் இல்லையேல் இவள் இல்லை, அவள் இல்லையேல் இவன் இல்லை.  



Comments

Popular posts from this blog

சொல்ல மறந்த கதை