சொல்ல மறந்த கதை பாகம் - 2
கவி... அவள் எனக்கு பரீட்சையமானவள். எப்படி மறப்பேன் அந்த பெயரை... என்னை இயங்க வைத்தவள், ஏங்க வைத்தவள், தவிப்புகளை ரசிக்க வைத்த பெண் அவள். மறக்க முடியாத நினைவுகளாய் இருக்கிறாள். அந்த பெயரை கேட்டதும் இதயம் அமைதியானது, தூக்கம் கலைந்தவன் போல், பெயர் முகம் தெரியாத அந்த பெண்ணிடம் பேச துடிக்கிறேன். நானும் அவளிடம் "பொய் சொல்லாதீங்க, உண்மையாவே உங்க பேரு கவிதானா"... என்று குறுஞ்செய்தி அனுப்பினேன். அந்த பெண்ணிடம் இருந்து 'ஹலோ.. உண்மையாவே என் பெயர் அதான், உங்களுக்காக எங்க அப்பா அம்மா வைச்ச பேரை மாத்த முடியாது" என்று அனுப்பினாள். அதை படித்து பார்த்து விட்டு வாஞ்சையுடன் வழிந்த முகத்தோடு அந்த பெண்ணுக்கு Message அனுப்பினேன். "சரி.. நான்தான் பேட் பாய்... எனக்கு ஏன், குட் மார்னிங் Message அனுப்புறீங்க".. என்று அனுப்பியதும், அதை படித்து பார்த்தவள் கோபத்துடன் "சரி நான் பேசலை... குட் பை இனிமே எனக்கு Message பண்ண வேண்டாம்" என்று அனுப்பிவிட்டு போனவள் தான். அதுக்கப்புறம் ஒரு Message கூட வரவில்லை. நானும் அவளுடைய Messageக்காக காத்திருந்து நேரங்கள் வீணானது தான் மிச்சம்.
முகம் தெரியாத ஒரு பெண் எந்த நம்பிக்கையில் என்னிடம் பேசினாள். யாரா இருக்கும் என்ற கற்பனை விரிய தொடங்கியது. எனது கற்பனைகளுக்கு கை, கால்கள் முளைக்க தொடங்கின. என்றும் இல்லாத அந்த இரவுகள் புதுபொலிவை தந்தன. இசை அரசன் இளையராஜா எனது அறைக்குள்ளும், மனதிற்குள்ளும் இசைத்துகொண்டிருக்கிறார். காற்று அசைவது போல் நானும் அசைகிறேன். எங்க ஆத்தா என்னை பார்த்து 'நாளைக்கு ஊருக்கு போயிடுவியா' என்று கேட்டதும் மகிழ்ச்சியெல்லாம் பறந்து போய் சோகமான துக்க நாள் வந்தது போல, ஆமா என்றேன். நான் சின்ன வயதில் இருந்தே அம்மாச்சியை ஆத்தா என்று கூப்பிட்டே பழக்கம். ஆத்தாவின் மடியில் உறங்க ஆசைப்பட்டேன். ஆனால், அவளுக்கு அன்று உடல்நிலை சரியில்லை. அவளது மடியில் உறங்கும்போது எனது தலைமுடியை கோதி காதில் அழகு அழகான சேதி சொல்வாள். கேட்க கேட்க ரசனையை தரும். அவள் சொல்லும் கதை தன்னை அறியாமல் சிரித்து கேட்டு கொண்டிருப்பேன். ஒரு ராத்திரியில் பல வீட்டு ரகசியங்களை காதில் போடுவாள். எனக்கே ஆச்சர்யம் எப்படி வீட்டில் இருந்துகொண்டே ஊரில் உள்ள நடப்புகளை தெரிந்து கொள்கிறாள்.
எப்படி ஆத்தா உனக்கு தெரியும்னு கேட்டா. "தண்ணீர் டாங்கிக்கு தண்ணி பிடிக்க வந்தா அழகி, அவகிட்ட பேசும்போது, ஊர் கதை... ஒலக கதையை சொல்லுவா, அப்புறம் மச்சக்காளை பொண்டாட்டி வரும்... கொஞ்ச நேரம் பேசிட்டு நா வாரேன் ஆச்சினு வீட்டுக்கு போயிட்டா இப்படிதான் பொலப்பு போகுது" என்றாள். எங்க ஆத்தாவுக்கு வியாழக்கிழமை வாயில் நுழையாது, விசாலக்கிழமைன்னுதான் சொல்லும். படம் பாக்குறதுன்னா உசுரு. விஜய் நடிச்ச பிரியமானவளே படத்தை, அக்ரீமண்ட் படம் இருக்கு போடு பாப்போம்னு சொல்லும்.. தனக்கு பிடித்த வார்த்தைகளை மனசுக்குள் பதிய வைச்சு சொல்லுறது. அவளது கை சுருக்கங்களை பிடித்து, வலுவலுப்பு இழந்த தோள் சுருங்கிய கன்னங்களை தடவி கண்களை பார்க்கும் கவிதை அழகினை ரசித்தேன். அந்த இரவில் தன் நோயை மறந்தாள் என் அழகம்மாள். என் தாயின் மறுபிறவி ஆனவளே உன்னை விட்டு வெகுதூரம் போய்விட்டேன் நான். நீ என்னையே தேடி கொண்டிருக்கிறாய் என்று என் மனதுக்குள்ளே நினைத்து கொண்டு மீண்டும் அவளிடம் பேச்சு கொடுத்தேன். ஏன் ஆத்தா ஐயா உன் கூட சண்டையா? பேச மாட்டேங்குறாரு என்றதும் பெரு மூச்சு விட்டு காதில் ரகசியம் சொல்வது போல் என்னிடம் சொன்னாள். மம்ம்மகும் அந்த ஆள் கூட எனக்கு என்ன சண்டை... அவன் தான் இளந்தாரி மாதிரி முறுக்கிக்கிட்டு திரியுரான்... நேத்து உன் பெரிய மாமன் வந்தான். ம்ம்ம் சரி என்றேன். அப்பன் மவனுக்குள்ளே ஏதோ பேச்சு தகராறு அதுக்கு என்கிட்ட பேசாம இருக்கான். போலே உன்கிட்ட ஏன் நா பேசனும், அதான் உன் மவன், மருவக வந்துட்டாக மகாராணியாட்டம் பாத்துக்குவாக நீ யாரோ நாயாரோ... சொன்னா நான் என்னடா பன்னுவேன். போ... எங்கே போனாலும் என்கிட்டதான் வந்தாகனும். மாப்பிள்ளைக்கு அழகம்மாவை பத்தி தெரியலை, பீ துணி அள்ளி போட யாரும் இல்லாம வீடே அநாதியாட்டம் கெடந்துச்சு... அப்போ ஒரு பயலும் எட்டி பாக்கலை இப்போ உன் மாமன் கூப்பிட்டா போயிடுவேனா? போடா.. இந்த கட்டை இங்கேதான் வெந்து சாகும். உன் சின்ன மாமன் கண்ணு தெரியாதவன் ஆறுமுகம் இல்லைனா எப்போவோ என்னை சுடுகாட்டுல மண் அள்ளி போட்டு மூடியிருப்பாய்ங்க... என்னமோ ஏன் விதி நான் இப்படி ஆகிட்டேன்... நா செத்தா தான் உன் ஐயாவுக்கு அருமை தெரியும், வீடு வீடா சோத்துக்கு அலைய வைப்பாய்ங்க... பேசிக்கொண்டே அழுது கண்ணீரால் தனது இயலாமையை போக்கினாள் ஆத்தா. அவள் உடைந்து அழுவதை பார்க்க மனம் சகிக்கவில்லை.
அவள் உடைந்து அழுவதை பார்க்க மனம் சகிக்கவில்லை. என் பெத்த ராசா நீ வந்து என் துணியெல்லாம் துவைச்சு போடுற, சமைக்கிற என் மகள் பெத்த முத்து நீ... உனக்காகவது எங்களை பாக்கனும் தோனுதே நீ நல்லா இருக்கனும் என்று கூறியபடியே கண்ணீர் வடிந்த கண்களோடு என் முகத்தை உருவி முத்தம் கொடுத்தாள் அவளுடன் பேசியதில் உறக்கம் வரவில்லை. என் தாயின் முகத்தை அறிந்ததை விட, அவள் முந்தானையை பிடித்து திரிந்த நாட்களே அதிகம். ஊரே என்னை கேலி கிண்டல் செய்தன, இதோ வந்துட்டான் கிழவி பிள்ளை, உன் அம்மா யாருடா கேட்டா என் ஆத்தா அழகம்மாள் சொல்லியிருக்கேன். என் ஆத்தா அவள் ஆயுளின் பாதியை எனக்கு அன்பாக தந்தவள். பழைய நினைவுகள் மனதை கரைய வைத்தன. மாமா வீட்டுக்கு டிவி வாங்கிட்டு வர்றதுக்கு முன்னாடி, வெள்ளி, சனி நைட்டு பஞ்சாயத்து டிவிக்கு போயிடும். மாடு மேய்க்க போன இடத்துல சொட்டாங்காய் விளையாண்டது, வள்ளியம்மை கண்மாயில மாங்கா மரத்துல ஏறி கண்ணாமூச்சி ஆடுனது, ஊர் கேணில சொர்க்கல் பாய்ஞ்சது எல்லோம் வந்தோடியது.
சிறு வயது நினைவுகளை மனதில் அசைபோடும்போதெல்லாம், ஏதோ கற்காலத்தில் வாழ்ந்தது போல ஒரு பெருமை கிடைக்கிறது. வயது நாற்பது வயதை தொட்ட அனுபவம் போல பெருமூச்சு வேற.. ஆத்தாவும் என்கூட பேசிக்கிட்டே உறங்கியது.
அந்த நேரம் பார்த்து எதிர்பாராத ஒருவரிடம் இருந்து குட் நைட் Message வந்தால் எப்படி இருக்கும். அதுவும் நைட் 12 மணிக்கு... அப்படி ஒரு தித்திப்பு மனசுக்குள் வந்தது. அய்யய்யோ அந்த பொண்ணுகிட்ட இருந்து Message வந்திடுச்சே வந்திடுச்சேனு துள்ளி குதிக்கனும் போல இருந்தது. நா கண்டும் காணாதது போல எதுவும் ரிப்ளை அனுப்பவில்லை.. காலையில் பேசிக்கலாம் என நினைத்தபடி நானும் தூங்கிட்டேன். அடுத்த நாள் காலை ஆத்தாவின் கண்களில் வந்த கண்ணீரை என்னால் உணர முடிந்தது. "இப்போ போனா இனி எப்ப வருவியோனு தெரியலை, பாத்து போ" என்றாள். ஒருத்தரை ஏங்க வைத்து காக்க வைக்கிற கொடுமை மிகவும் கொடியது.
பாசத்திற்காக ஏங்கும் இதயத்தை கொன்றுவிட்டு, பிணத்திடம் சொல்லி முறையிடுவதால் என்ன லாபம். இறந்தவர் வந்து உங்களிடம் பேராண்டி அழுகாதேன்னு தேற்ற போகிறாளா. சின்ன வயது நினைப்பில் என்னை கக்கத்தில் வைத்து கொஞ்ச போகிறாளா... யாருக்கு வேண்டும் உன் பரிதாபமும், கண்ணீரும்... காத்திருக்க வயதுமில்லை, ஏங்கி தவிக்க தெம்பு இல்லாத மனுசியிடம் நீங்கள் அமிர்தத்தை கொடுத்தாலும் விஷம் விஷம்தான். அப்படித்தான் இருந்தது என் ஆத்தாவை விட்டு பிரிந்து சென்றபோது. அன்று தான் அவளை கடைசியாக நடந்து திரிவதை கண்டது.
நானும் குறும்பூரில் இருந்து மாங்குடி வந்துட்டேன். காலேஜ் போன நாள் முதல், அந்த வாரம் வரை அந்த பெண் என்னை எந்த தொந்தரவும் செய்யவில்லை. அவளது நினைவுகள் ஏதுமின்றி நான் இருந்தேன். ஆத்தாவை பற்றிய சிந்தனை தான் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தன. படுத்த படுக்கையோடு மகராசி போய் சேர்ந்துட்டான்னு பிறர் சொல்லும் வார்த்தையை கேட்க நான் இறந்து அவள் உயிரோடு இருந்திருக்கலாம் என்று தோன்றியது. வார்த்தைகளால் சில உணர்வுகளை கடந்து சென்றுவிடலாம். அவள் எனக்குள்ளே பரவி கிடக்கிறாள். கல்லூரியை விட்டு ஓடிவிடலாம் என்றே நினைத்தேன். அப்படியே நாட்களும் கடந்தன. கவி என்ற பெண்ணும் முன்பை விட இப்போது என்னோடு நட்புடன் பேச தொடங்கினாள். என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டு கசப்பான நினைவுகளை மறந்து என்னுடன் பேச தொடங்கினாள். Message மூலம் மட்டுமே பேசினாள். அவள் யார்? எப்படி இருப்பா, உருவம், சிகப்பா, கருப்பா, குட்டையா நெட்டையா எதுவும் தெரியாது. அவளது குரலை ஒருமுறை மட்டுமே என்னை திட்டியபோது கேட்டிருக்கிறேன். செமஸ்டர் நெருங்கும் நேரம் காலேஜ் பேருந்துக்காக காத்திருக்கிறேன். அன்று உலகமே அமைதியாக இருப்பது போல் உணர்ந்தேன். யாரிடமும் அதிகம் பேசவில்லை.
மச்சான் பிரபுகிட்ட கூட சரியா பேசலை. அந்த பெண்ணிடம் இருந்து Message வந்ததும் மல்லிகை பூத்த முகம் மாதிரி, நான் மாறினேன். நட்பு காதலாக மாறியதே தெரியாத அளவுக்கு இரவு முழுக்க சாட்டிங் தான். என்ன பேசினோம், எதனால் ஈர்ப்பு வந்தது... எப்படி தொடங்கியது இந்த நீண்ட நேர பேச்சு எதுவும் புரியவில்லை. எல்லாமே புதுசா இருந்தது. எனக்கே என்னை ரொம்ப பிடிக்க தொடங்கியது. யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை காப்பதுபோல அவளை பற்றிய உண்மைகள் ஏதும் தெரியாமல் உறவாடினேன். அது ஒரு மதிய நேரம்... வகுப்பறையில் இருக்கிறேன், பாடம் கவனித்துகொண்டே அவளிடம் உரையாடினேன். அந்த நேரத்தில் அவளிடம் வந்த ஒரு Message எதிர்பார்க்காத கேள்வியும், பதிலுமாய் அனுப்பினாள்."எனக்காக நீ எதுவும் பேச வேண்டாம்... உனக்கு பிடிச்சிருந்தா பேசு... நானும் உன்னை மாதிரிதான்.., உன் கூட பேசாம இருக்க முடியலை... வெயிட் பண்ணனுமா, வேணாமான்னு கூட சொல்ல தெரியலை... ரொம்ப நேரம் யோசிச்சா தலைவலிக்குது... முடியலைடா சாமி... எனக்கு கண்ணு கலங்குது... உனக்கு புரியுர மாதிரி பேச தெரியலை... பொறுமையா சொல்லு பை" இப்படி ஒரு Message அவளிடமிருந்து வந்ததை அவசரம் அவசரமா படிச்சிட்டு.. அப்புறும் நிறுத்தி நிதானமா வார்த்தைகளை மனதில் பதியும் படி படிக்கும் போது செம்ம கிக்கா இருந்தது. கண்களை பார்த்து செவிகள் கேட்க சொல்லும் காதலுக்கு வரும் மகிழ்ச்சிதான்... வா பறந்து போகலாம் மேகமாய், சாலையெங்கும் குளிர் காற்று வீசட்டும் பனி பிரதேசத்தில் வின்மீண்களை எண்ணி மகிழலாம் என்பது போன்ற உணர்வு தோன்றியது.
குறுஞ்செய்தியில் அவள் அனுப்பிய காதல் Message என்னை பாடம் கவனிக்க விடாமல் தொல்லை செய்தது. அவளது சொற்களிலிருந்து மெளனத்திற்கு திரும்பும் வழி அது. அவளை கட்டியணைத்து, முத்தம் கொடுத்து கொண்டாடும் மனநிலையில் இருந்தேன். அவளது கைகளால் தொட்டு நிதானமான வார்த்தைகளால் பதிவு செய்யப்பட்ட Message ஐ பார்த்து பல ஆயிரம் முத்தங்களை கொடுத்து பூரித்து போனேன். இதற்காக அவளை காண எத்தனை நாட்கள் வேண்டும் என்றாலும் காத்திருக்கலாம். ஆனால் கடைசி வரை காணாமல் போவேன் என்று அப்போது தெரியவில்லை. அவளோடு பேசிக்கொண்டு வீடு முழுக்க பரவி கிடக்கும் குப்பைகளுக்கு நடுவில் நான் மட்டும் வானத்தில் பறக்கிறேன். இரவுகள் வந்து விட்டால் இசைஞானியை பற்றி பேசாத நாளே இல்லை. ஆனால், பெண் ஒருத்தி என்னை விரும்பி விட்டாள், என்பதற்காக அவளை முழுமையாக புரிந்துகொள்வதற்குள் பல ஆயிரம் கட்டளைகள்.
யார்கிட்ட பேசனும், எங்கே சிரிக்கனும், அங்கே போகாதே, உனக்கு ஒன்னும் தெரியாது, இந்த உலகம் கெட்டது, நீ பச்சை புள்ளை, 19 வயது ஆனாலும் நான் சொல்றத தான் கேட்கனும், இப்படித்தான் ஆடை உடுத்தனும், எங்கே போனாலும் சொல்லிட்டு போ, ஏன் ஊருக்கு போற என்று ஒரு சைக்கோ நான் பாட்டுக்க ஆர்டர் போடுறேன் அவளும் பொறுமையா கேட்டுட்டு சரிப்பா சொல்றேன் சொல்லிட்டு ஒன்னு என்கிட்ட கேட்டா. "இதுக்கு முன்னாடி இப்படி சொன்னது இல்லை, இப்போ எதுக்கு இதை சொல்ற, புது அக்கறைன்னு கேட்பா".. நானும் அவகிட்ட "அப்போ என் லவ்வரு இல்லை, இப்ப நாம லவ் பன்றோம். உனக்கு ஒன்னுனா என்னால தாங்க முடியாது. அதுவும் பசங்களை பத்தி நல்லாவே தெரியும், ஒரு பொண்ணு சிரிச்சு பேசிட்டா லவ்வுன்னு வந்து நிப்பானுங்க" என்று Message அனுப்பினேன். அவளுக்கு என்ன தோனுச்சுனு தெரியலை கோபத்தில் இருந்தாலோ தெரியாது ஆனால் அப்படி ஒரு Message வந்தது "இனிமே பாத்ரூம் வந்தா கூட உன்கிட்ட சொல்லிட்டே போறேன்" என்று அனுப்பினாள். அன்று அவளது கோபம் சுத்தமாக புரியவில்லை. இன்று உணர்கிறேன், ஆனால் அவள் என் பக்கத்தில் இல்லை. இதை விட ஒரு கொடுமை, ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஓபன் பன்றதுதான்.
முகநூலால் அவள் கெட்டுவிடுவாள், அதெல்லாம் உனக்கு எதுக்கு... நீ அக்கவுன்ட் கிரியேட் பன்ற.. வேண்டாம் வம்பை விலைக்கு வாங்காத.. அவளுக்கும் ஒரு ஆசைதான் அப்படி என்னதான் இருக்கிறது தெரிஞ்சுக்க ஓபன் பண்ணிருந்தாள். அதிலும் அவளது புகைப்படம் இல்லை... நடிகை அமலாவின் புகைப்படம். அவங்களுக்கு நடிகை அமலாவை ரொம்ப பிடிக்கும்னு Message மூலமா சொல்லியிருக்கா. நானும் உன் அக்கவுண்ட் பாஸ்வோர்டு சொல்லு, ஃபேஸ்புக் ஐடியை கொடுன்னு டார்ச்சர் பண்ணிருக்கேன். அவளும் ஒரு நம்பிக்கையில் என்னிடம் கொடுத்தாள். ஒரு பெண்ணாக இருந்தாள் பலரும் Friend Request கொடுப்பது சகஜம்.
ஆனால், இது தெரியாமல் அவளிடம் பலமுறை சண்டை போட்டிருக்கேன். பெரிய தவறு நடந்துவிட்டது போல.. "சொல்லு... யாருடி அவன், அவன் எதுக்கு உனக்கு Message பன்றான். உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.. உங்க பேரு என்னனு கேட்குறான்... இப்ப புரியுதா இதுக்குதான் ஃபேஸ்புக் ஓபன் பண்ணாதனு சொன்னேன். கேட்டியா நீ... உன் இஷ்ட மயிருக்கு பண்ணிக்கிட்டு இருக்காத.. எதுவும் தெரியாமல் நாங்க சொல்லலைனு" சண்டை போடுறேன். ஆனால் அவள் மீது எந்த தவறும் இல்லை. அவளும் Message மூலம் அழுவது போல பேசினாள். சாரி.. சாரி.. சாரி.. என்றாள். நான் உன் கூட பேச முடியாது.. சொல்லிட்டு போனை சுவிட்ச் ஆப் பண்ணிட்டேன்.
கவி மீது எந்த தவறும் இல்லை, ஆனால் அதையெல்லாம் இப்போ நினைச்சா எவ்வ்ளவு கேவலமா நடந்திருக்கேன். தன்னை ஆண் என்று என்ன பெருமை இருக்கிறது. வடிகட்டின முட்டாளாக பிற்போக்கு மனம் கொண்ட, அவளது உணர்வுகளை மதிக்க தெரியாத ஆணாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கே என் மீது வெறுப்பு வருகிறது. பலமுறை அவளிடம் சாரி கேட்க வேண்டும். காரணம் இல்லாத கோபங்களுக்கும், சண்டைகளுக்கும் நானே காரணம். காதல் என்ற பெயரில் அவளது சுதந்திரத்தை பறித்து விட்டேன்.. வெரி சாரி கவி...
தொடரும்
Comments
Post a Comment