அப்பாவி பெண் "செடல்"


சாதி, மதம், புராணம், இதிகாசம், சடங்குகளால் இறுகக் கட்டமைக்கப்பட்ட 
தமிழ்ச் சமூக வாழ்க்கையை புரிந்து கொள்ளும் முயற்சிதான் 'செடல்'.

இந்த நாவல் முழுக்கவே கடவுள் ஒரு முக்கிய பாத்திரமாக காட்சியளிக்கிறது. புனையப்பட்ட ஒரு சமூகத்தின் ஒழுங்கமைவுக்காகப் பலி கொடுக்கப்படும் பெண்ணை நாவல் முழுக்கவே கடவுள் பின் தொடர்கிறார். செடலும் கடவுள் தன்னுடன் எப்போதும் இருப்பதாகவே நம்புகிறாள்.

கடவுளை ஏன் அவள் நம்ப வேண்டும்?அதனால் அவளுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது. சிறு வயதிலேயே ஊர் கட்டுப்பாட்டில் பொட்டுக்கட்டி விடப்பட்டு கடவுளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். கடவுள் மனித உடலுடன் உறவு வைத்து கொள்வது  சாத்தியமில்லை. கண்களால் காணாத கடவுளை நம்பி ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநீதியை கண்டு கோபம் கொள்ளாமல் எதார்த்த வாழ்க்கையோடு பொருந்தி செல்கிறது. 

செடலின் குடும்பம் நிலமற்ற கீழ் சாதி வகுப்பினர். உயர்சாதியினர் நிலம் உள்ளவர்கள் நல்ல வசதி வாய்ப்பு படைத்தவர்கள். அவர்களது நிலத்தில் அடிமை வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், உயர்சாதியினர் பேச்சுக்கு கட்டுப்பட்டு செடலை பொட்டுகட்டி விட அவளது பெற்றோர் அறை மனதோடு ஒப்புக்கொள்கின்றனர். செடலை ஏன் பொட்டுகட்டி விட வேண்டும் அப்படியொரு வழக்கு இந்த  சமூகத்தில் இன்றும்  இருக்கிறதா? என்ற கேள்விகளும் கோபமும் வருமேயானால் கண்டிப்பாக இந்த நாவலை உங்களால் வாசிக்க முடியும். 

செடல் ஒரு பறையர் சாதிப் பெண். பறையர்களுக்குள்ளாகவே தாழ்வாக எண்ணப்படும் கூத்தாடும் சமூகத்தைச் சேர்ந்தவள். பறையர்களில் பூசாரிகளுக்கும் அய்யர் என்ற பின்னொட்டு இருப்பது இந்த நாவல் வழியாகவே அறிந்து கொள்ள முடிகிறது. அச்சமூகப் பெண்களே செல்லியம்மன் என்ற செடலின் கிராமத்துக்கும் சுற்று வட்டார கிராமங்களுக்கும்  கன்னி தெய்வத்துக்கும் பொட்டுகட்டி விடப்படுகின்றனர் என்பதை மனம் ஏற்க மறுத்தாலும் நடந்த உண்மை சம்பவங்களை மறுதலிக்க முடியாது. 

செடல் குடும்ப பின்னணி அதில் அவள் எட்டாவது பெண் மகள், ஊரில் நிலவும் வறுமை, பஞ்சம், பட்டினி வந்து சாகும் மக்களின் மோசமான காலத்தை கண்முன்னே காட்சியளிக்கிறது. நோய் வந்து செத்தவர்களை விட, பசி வந்து ஆடு, மாடு, கோழி, மனிதர்கள் எல்லோரும் இறக்கின்றனர். சிலர் உயிரை காக்க ஊரை விட்டே ஓடிவிட்டனர். ஊர் நலனை காக்க அறியாத வயதில் சாமிக்காக நேர்ந்து விடப்பட்ட செடல், தனிமையும் வெறுமையோடுதான் தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்தாள்.


கிழவி இருந்தவரை கவலை என்பதை அறியாதவளாய் இருந்தவள், கிழவி இறந்த பிறகு இந்த சமூகத்தை புரிந்துகொள்ளும் அளவிற்கு பக்குவம் அடைகிறாள். தனிமையும் வெறுப்பும் சூழ்ந்து கொள்கிறது. ஒரு நாள் இரவில் புயலும் காற்றும் அடித்து ஊற்றும் மழையில் வயதுக்கு வரும் செடலை ஊர் பூசாரி முதல் அந்த மக்கள் எல்லோரும் அவளை தீட்டுப்பட்டவள் என்றே தள்ளி வைக்கின்றனர். ஊரே வேண்டாம் என்று கோபத்தில் தனது சொந்தக்கார பொன்னனுடன் சொந்த ஊரை விட்டு நெடுங்குளம் செல்கிறாள். 

நெடுங்குளம் போன செடல் கூத்துக்கு சென்று ஆட்டம் பாட்டமாய் வாழ்க்கையை கழிக்கிறாள். பேரும் புகழும் சேர்கிறது மக்கள் மனதில் செடல் செடல் என்ற பேச்சு ஓயவில்லை சலங்கை கட்டி வந்தாள் பத்ரகாளியே தோற்று போவாள் என்று ஊரே அவளை மெச்சுகிறது.

தனது வலியை ஒரு இடத்தில் பேசுவாள் 

"எனக்கு யார்மேலயும் கோவமில்ல. ஒருவரயும் கொற சொல்லல. எல்லாமும் நான் முன்செம்மாந்தரத்துல செஞ்ச வென, பாவம். சல்லியன் சொன்னத கர்ணன் கேக்கல, அது அவனோட விதி. போர்க்களத்துல மாண்டுபோனான். பலி கொடுக்கிறப்பக் கூட அரவானுக்கு கன்னி கயிச்சித்தான் பலியிட்டாங்க. எனக்கு எதுவுமில்ல. மூக்குல வெளக்கமாத்து குச்சிகூட போட முடியாது. கம்மனாட்டி கயித்தாட்டம் கெடக்கு. புள்ளெ கொடுக்க ஆயிரம் பேர் வந்தாலும்,என்ன வச்சிப் படக்க ஒருத்தன் வருவானா?"

செடல் எல்லோருக்கும் 'பொதுவானவள்' என்ற எண்ணத்தில் கவுண்டர், வெள்ளாளர் உடையார் சாதி ஆண்கள் அவளை சீண்டிகொண்டே இருக்கின்றனர். வீரமுத்து உடையார் செடலை பணத்தினால் அடைய  நினைக்கிறான். பொன்னன் இறந்த பிறகு ஆரான் நாடக்குழுவில் ஒருத்தி என்று அவளை சீண்ட முனைகிறான். பொட்டுகட்டி விட்டவள் யார் கூப்பிட்டாலும் வந்துவிடுவாள் காசு கொடுத்தாலும் படுதிடுவாள் என்று ஊரே பலருடன் இணைத்து கண், காது, வாய் மூக்கு வைத்து பேசுபவர்களிடம் செடல் பொசுக்கும் நெருப்பாகத்தான் இருந்தாள். 


அவள் தன் மனம் கலங்கப்பட்டு விட்டதாக வீரமுத்து உடையார்  முன் அழுதாலும் கூட இறுதிவரை அவள் பணியவில்லை. கடவுளுக்காக பொட்டுகட்டி விடப்பட்டவள் உயர் சாதி, கீழ் சாதி எந்த சாதி பெண்ணாக இருந்தாலும் அவளை இந்த சமூகம் வேறு பேர் வைத்து அழைக்க காத்திருக்கும். தனது வாழ்வில் சமரசம் செய்ய விரும்பாத செடல் கடைசி வரை கடவுளுக்காகவே வாழ்ந்து விட்டாள். 

மனிதர்கள்  காட்டாத கரிசனம் கடவுளிடம் கூட கிடைக்கவில்லை. போற்றி மதிக்க வேண்டிய பெண்ணை இந்த சமூகம் தேவிடியா பட்டம் கொடுத்து புறக்கணித்து விட்டது. அப்பழுக்கில்லாத செடலுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை இந்தச் சமூகம் கொடுக்க தவறிவிட்டதை எண்ணி துயருற்றேன். கூத்தில் பேர் பெற்ற ஆட்டக்காரி  பாஞ்சாலியிடம் தஞ்சமடைவதுடன் நாவல் முடிவடைகிறது. கண்ணீர் விட்டு அழுக வார்த்தைகள் கிடைக்கவில்லை. செடல் என்னை ஏதோ செய்து கொண்டிடுக்கிறாள். தூங்கமுடியாமல் தவித்து கொண்டிருக்கிறேன். அந்த தாக்கம் என்னை விட்டு நீங்காமல் உள்ளுக்குள்ளே அழுது கொண்டிருக்கிறது.

இமயம் போன்ற எழுத்துக்களால் எழுத்தாளர் இமயம் என் இதயத்தை நனைத்து விட்டார். 

பாண்டித்துரை


Comments

Popular posts from this blog

சொல்ல மறந்த கதை